தேனி: ஆண்டிபட்டி அருகே பெரியகுளத்தில் உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி வைகை அணை நிரம்பியதை அடுத்து முதலில் பெரியாறு பாசனப்பகுதி இருபோக சாகுபடி நிலங்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து வைகை அணையின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பூர்வீக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முதல் சுற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் சுற்றாக தண்ணீர் டிசம்பர் 11 முதல் 15ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தின் வைகை பூர்வீக பாசன இரண்டாம் பகுதி நிலங்களுக்கும், கடந்த 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக மூன்றாம் பகுதி பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் மதுரை மாவட்ட முதல் பகுதி பூர்வீக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 26ம் தேதி வரை மொத்தமாக 229 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 6 ஆயிரத்து 31 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் கிருதுமால் நதி பகுதி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் ஆதாரங்களுக்காக 10 நாட்களுக்கு வினாடிக்கு 690 மில்லியன் கன அடி தண்ணீர் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியே செல்வதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் வைகை ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளுக்கு தண்ணீர் விடுவது போன்ற செயல்களுக்கு செல்லக்கூடாது என நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில், அணையின் நீர்மட்டம் 69.59 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 1,961 கன அடியாக உள்ளது.
வைகை பூர்வீக முதல் பகுதி பாசனத்திற்காக அணையிலிருந்து இன்று முதல் விநாடிக்கு 1,400 கன அடியும், ஏற்கனவே பாசனத்திற்கு கால்வாய் மூலம் திறக்கப்பட்டுள்ள 1,130 கன அடியும் மதுரை குடிநீருக்காக திறக்கப்பட்ட 69 கன அடியும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரத்து 599 கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
அணையில் நீர் இருப்பு 5 ஆயிரத்து 724 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகியகால பயிர்களை நடவுசெய்து, அதிக மகசூல் பெறுமாறு நீர்வளத்துறையினர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே சமயத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களில் ஆற்றுக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்னும் பனிச் சாலை! கோவையில் கடும் பனி மூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி!