தேனி: ஸ்ரீரங்கபுரத்தில், சென்ட்ரல் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தீபம் சிலம்பம் தற்காப்பு அறக்கட்டளை மாணவர்கள் 173 பேர் சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார், 5 மணி நேரம் தொடர்ந்து 173 மாணவர்கள் ஒன்றாக பாவலா வரிசையில் அடிமுறையும் சேர்த்து சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய இம்முயற்சி தொடர்ந்து ஐந்து மணி நேரமாக, மாலை 3 மணி வரை நடைபெற்றது. இறுதியில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றனர்.
இதைத்தொடர்ந்து எட்டு வயது சிறுவன் ஹரிஷ் சிலம்பம் சுற்றிக்கொண்டே ஆயிரம் தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். சிறுவனை அவர்களது பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி உலக சாதனை முயற்சிக்கு ஆதரவளித்தனர்.
சிலம்பம் சுற்றிக்கொண்டு ஆயிரம் தோப்புக்கரணம் போட்ட எட்டு வயது சிறுவன் ஹரிஷ், உலக சாதனைப் படைத்ததாக நடுவர் அங்கீகாரம் கொடுத்ததை அடுத்து, சோழன் உலக சாதனைப் புக்கில் இடம்பெற்றார். இந்த உலக சாதனை முயற்சியில் சிலம்பம் சுற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க: சிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது வெடி விபத்து; இருவர் படுகாயம்