கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கொடியத் தொற்றை விரட்ட மத்திய, மாநில அரசுகள் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. சமய மாநாட்டில் பங்கேற்று கரோனா தொற்று ஏற்பட்ட போடியைச் சேர்ந்தவரின் மனைவி உயிரிழந்தார்.
இதனையடுத்து போடி, பெரியகுளம், அல்லிநகரம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முடக்கப்பட்டு, தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தொடர்ந்து ட்ரோன் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் தென்மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன், இன்று தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் கண்காணிப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். தேனியில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள போடியில், அரண்மனைப் பகுதி, அசன் உசன் தெரு, பேருந்து நிலையம், மேலச்சொக்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, சிலமலை உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரணப் பொருள்கள் வழங்கத் தடை