கரோனா தொற்று பரவாமல் இருக்க, நாளை ஒரு நாள் சுய ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விட்டிருக்கும் சூழலில், இன்று காலை தேனி உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தேனி நகரின் மீறு சமுத்திர கண்மாய் அருகே அமைந்துள்ள உழவர் சந்தைக்கு, வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூடியதால், சந்தைக்கு வந்திறங்கிய காய்கறிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
முன்னதாக உழவர் சந்தை வாயிலில், தேனி நகராட்சி சார்பில் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கைகள் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், கைகளைச் சுத்தம் செய்த பின்னரே, சந்தைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமாக, தேனி உழவர் சந்தைக்கு தினமும் 2,000 பேர் வருவார்கள். ஆனால் தேனியில் செயல்படும் வாரச்சந்தை இன்று மூடப்ட்டதால் மக்கள் உழவர் சந்தையை நோக்கி படையெடுத்தனர். இதனால் இன்று வழக்கைத்தைவிட அதிகமாக 5,000 பேர் வரை வந்திருக்கலாம் என்றும் உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தினமும் 30 டன் அளவிலான காய்கறிகளே விற்பனையாகும். ஆனால், இன்று 70 டன் காய்கறிகள் ஒரே நாளில் விற்பனையானது. அதேபோல, காலை 9 முதல் 10 மணிக்குள் காய்கறிகள் அனைத்தும் விற்றுவிடும் சூழலில், கைகளைக் கழுவிய பின்னரே மக்கள் அனுமதிக்கப்பட்டதால், 2 மணிவரை விற்பனை நடைபெற்றுள்ளது.
நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக மக்கள் காய்கறிகள் வாங்க வந்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிட்-19: 12 நாள்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று