தேனி: திட்டச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சென்றாயபெருமாள் என்ற ஒரு தலைமை ஆசிரியரும், சுமதி என்ற ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பள்ளியின் தாளாளராக அன்பழகன் என்பவர் இருக்கின்றார்.
இதைத் தொடர்ந்து, அன்பழகன் தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் முத்தையா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் அன்பழகன் அரசு உதவி பெறும் பள்ளியை நடத்தி வருவதை மறைத்து, மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்ற போதும், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தன்னைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பது, தனது பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சென்றாயபெருமாள் மற்றும் சுமதி தான் என நினைத்து அவர்களை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் கூட வழங்காமல் நிலுவை வைத்து வந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர்கள், அரசு மூலம் நேரடியாக சம்பளம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் பள்ளிக்கு வந்த தாளாளர் அன்பழகன் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் கோபமடைந்த அன்பழகன் திடீரென சரமாரியாக தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளை தாக்கியதுடன் கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின்னர் அந்த தாளாளர், "இது என்னுடைய பள்ளி எனக்குச் சொந்தமானது, இங்கே யாரும் இருக்கத் தேவையில்லை என்று கூறி ஆசிரியர்களை வெளியே போகுமாறு" கூறியுள்ளார். ஆனால் பள்ளி வேலை நேரம் முடியாததால் வெளியே செல்ல மாட்டோம் என ஆசிரியர்கள் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த தாளாளர் அன்பழகன், பள்ளியின் அனைத்து வகுப்பறைகள் மற்றும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இதனால் வகுப்பறைகளுக்குள் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறத் தொடங்கியுள்ளனர். பின்னர் தாளாளர் அன்பழகன் தலைமை ஆசிரியரை அடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று செய்தி சேகரித்த வந்த தகவலை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதன் பின்னர், ஆட்டோ மூலமாக பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் சென்ராயப்பெருமாள் மற்றும் ஆசிரியை சுமதி ஆகியோரிடம் கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த பள்ளி தாளாளர் அன்பழகன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேனியில் வகுப்பறைக்குள் பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கி விட்டு மாணவ, மாணவிகளை பூட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காட்பாடி அருகே கிராவல் மண் கொள்ளை.. அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் புகார்!