உலகை அச்சுறுத்தும் கரோனா தொற்றால் இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட இடங்களில் உள்ள தெருக்கள், முக்கிய வீதிகள் என அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு காவல் துறையினரால் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் கரோனா தொற்றின் ஆபத்தை உணராமல் சிலர் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்ட காவல் துறையினர் ட்ரோன் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
தேனியில் நேரு சிலை சந்திப்பு, பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் சாலை, அல்லிநகரம் என நகரின் முக்கிய பகுதிகளில் இந்தக் கண்காணிப்பு நடைபெறுகிறது.
இதன் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உள்ளனர். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.