தொழில் சம்பந்தமாகவும், மலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தேனி மாவட்ட எல்லையைக் கடந்து கேரளாவிற்குள் செல்கின்றனர். அதேபோல மருத்துவம், வியாபாரம் போன்ற காரணத்திற்காக கேரளாவைச் சேர்ந்தவர்களும் தேனிக்குள் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த முக்கியச் சாலைகளில் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் அவ்வப்போது மரணமும் நிகழ்கின்றன. இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் சில வாகன ஓட்டிகள் அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்குவதே! அவ்வாறு விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 304-ஏ பிரிவின்படி தண்டனை வழங்கப்படுகிறது.
இதனை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் விதமாக, தேனி மாவட்ட காவல் துறை புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தின் விபத்துப் பகுதிகளை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் உள்ள சாலையில், மஞ்சள், வெள்ளை நிற பெயிண்ட் மூலம் விபத்துப்பகுதி என எழுதி, அதில் உருவ பொம்மை வரையப்பட்டு, 304-ஏ என எழுதப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் அதிகம் விபத்து ஏற்படுத்தும் பகுதிகளில், பேரிகார்டு, வேகத்தடை, ஒளிரும் பட்டை என காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை கையாண்டுவருகின்றனர். இதில் புதிய முயற்சியாக தற்போது அதிகம் விபத்து ஏற்படும் இடங்களில் இது போன்று உருவ பொம்மையுடன் தண்டனை சட்டப் பிரிவு எண் ஆகியவற்றை எழுதிவருகின்றார்.
இதன் மூலம் அதிவேகமாக சாலைகளில் வாகனங்களை இயக்குபவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.