தேனி: போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘மலையோரம் வீசும் காற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் காமெடி நடிகர் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் குரங்கணி மலைப்பகுதியில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (டிச.14) குரங்கணி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யோகி பாபுவின் உதவியாளர் சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதாம் உசேன் (35) என்பவருக்கும்; யோகி பாபுவின் கார் ஓட்டுநர் சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (31) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டிக்கொண்டு, திடீரென கைகலப்பில் ஈடுபட்டனர். இருவரும் மோதிக் கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேனை, கார் ஓட்டுநர் ராமச்சந்திரன் மூக்கில் குத்தியதால் ரத்தக் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து சதாம் உசேன் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பணியிடை நீக்கம்: கூட்டுறவு வங்கிச் செயலாளர் தற்கொலை