தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் உத்தமபாளையம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை வழிமறித்து சோதனைசெய்ததில், ஓட்டுநர் சரவணன் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
சந்தேகமடைந்த காவல் துறையினர் வாகனத்தைச் சோதனையிட்டதில், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் மூன்றாயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதனிடையே வாகனத்தில் இருந்த சுந்தர் என்பவர் தப்பியோடிவிட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. பறிமுதல்செய்யப்பட்ட சுமார் மூன்றாயிரத்து 600 கிலோ ரேஷன் அரிசி, மினி வேன் ஆகியவற்றை உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குடிமைப்பொருள் காவல் துறையினர் ஓட்டுநர் சரவணனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.