தேனி: சாதி மோதலை தூண்டும் வகையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் இன்று (செப் 21) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் அம்பேத்கர் சிலை முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர் AC.பாவரசு சாதி மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாதி மோதலைத் தூண்டும் வகையில் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த நிர்வாகி AC பாவரசு மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி வலியுறுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பெரியகுளம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கீதா உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை காவல் துறையினர் சீர் செய்தனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: இணையதள சேவை முடக்கம் பொதுமக்கள் அவதி!