தேனி: கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அது மட்டுமில்லாமல் இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (ஆக. 17) அறிவித்தார். அதில், “அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். தனி கூட்டம் நடத்த கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஓபிஎஸ்-இன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஓபிஎஸ் புகைப்படத்தை வைத்து ஆதரவு கோஷம் எழுப்பி தங்களின் மகிழச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம்