தேனி: பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகளில் ஒன்று பார்வையாளர்களை சந்திப்பதற்கும் மற்றொன்று ஓபிஎஸ் முக்கிய நபர்களை சந்திப்பதற்குமான இரண்டு அறைகள் உள்ளன.
மேலும் அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வு பெறுவதற்கான தனி அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த கொள்ளையர்கள், ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்ததில் நகை மற்றும் பணம், பொருள் உள்ளிட்டவைகள் ஏதும் இல்லாத நிலையில் 54 இன்ச் டிவியை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இன்று காலையில் வழக்கம் போல பாதுகாவலர்கள் சென்ற போது மேல் மாடியில் அறை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவி சத்தியா கொலை வழக்கு - கைதி சதீஷுக்கு சிறையில் பலத்த பாதுகாப்பு