திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தேனி மக்களவைத் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று முதல்முறையாக தொகுதிக்கு வருகை தந்த அவருக்கு, தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பிரிவில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அவருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிகழ்வில் திமுக ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவனை சால்வை அணிவித்து வரவேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தன்னை தேனி தொகுதிக்காரர் எனக் கூறினார். மேலும், தேனி மாவட்ட திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னையில் இருந்து வருகை தந்துள்ள டி.கே.எஸ்.இளங்கோவனை வரவேற்பதாகக் கூறி இருவரும் நட்பு பரிமாறிக் கொண்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேர்தல் விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான வாகனங்கள் இருந்ததால் திண்டுக்கல் - குமுளி மற்றும் கொடைக்கானல் பிரிவு சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.