தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து, முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையில், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கொடைக்கானல் மலை, தலையாறு உள்ளிட்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 51 அடியாக உயர்ந்ததையடுத்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்மட்டம் மேலும் உயர்ந்து 53 அடியை எட்டியது. இதனால் அணையின் கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.