தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தேனி ஆயுதப்படை தலைமைக் காவலர், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், சின்னமனூர் நகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றும் 33 வயதுடைய களப்பணியாளர், தேனியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றும் பெண்மணி என நேற்று (ஆக.28) ஒரேநாளில் 114 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் தேனி மாவட்டத்தில் கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 341பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,812 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் பெரியகுளம் ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த 62 வயது முதியவர், தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் என இரண்டு பேர் நேற்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 209ஆக உயர்ந்துள்ளது.