தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலின் ஆடி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், தேவிக்கும் சனீஸ்வர பகவானுக்கும் திருக்கல்யாண நிகழ்வு இன்று (ஆக. 05) நடைபெற்றது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா நிகழ்ச்சி நடைபெறவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சிக்கு கேரளா, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து மக்கள் வழிபடுவதற்காக வருவது வழக்கம். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி இறை வழிபாடு செய்வது இந்தக் கோயிலின் சிறப்பாக உள்ளது.
இந்த வருட ஆடி பெருந் திருவிழா ஜூலை 22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாரதனை காட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆடி மாதத்தில் பிரமமோற்சவத்தை முன்னிட்டு மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று (ஆகஸ்ட். 5) சனீஸ்வர பகவானுக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாண விழா நடைபெற்றது. சனீஸ்வர பகவானின் மனைவி நீலாதேவிக்கு உருவம் கிடையாது என்று கூறப்படுகிறது. அதனால் கும்பத்தில் நீலாதேவியின் உருவத்தை அமைத்து அந்த கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த கோயிலுக்கு வந்து குவிந்தனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.
சனீஸ்வர பகவானுக்கு என தனியாக கோயில்கள் அதிகம் இல்லை. தமிழ்நாட்டில் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் மட்டுமே சனீஸ்வர பகவானுக்க்கான தனி ஆலையம் அமைந்து உள்ளது. அதுவே இந்த கோயிலின் கூடுதல் சிறப்பாகவும் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.