தேனி அருகே உள்ள அல்லிநகரத்தில் விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வீரப்ப ஐயனார் கோவில் மலை அடிவாரப் பகுதியில் விளையக்கூடிய மா, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதுகாப்பு குறித்து இச்சங்கத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். இதற்காக வீரப்ப ஐயனார் கோவில் மலைச் சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை(ஜூன் 24) இந்த சோதனைச் சாவடியை கடந்து ஒரு டிராக்டர்,ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் ஆட்கள் சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இவர்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளுபர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த விவசாயிகள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது மணி என்பவர் தோட்டத்தில் ஓடை மணலை பதுக்கி வைத்திருந்தை கண்டுப்பிடித்தனர். மேலும் அருகில் உள்ள மூங்கில் தோப்பு நீரோடையில் இருந்து இந்த மணல் அள்ளப்பட்டது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோருக்கு விவசாயிகள் தகவல் அளித்துள்ளனர். பின் நிகழ்விடத்திற்கு வந்த அலுவலர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். ஆனால் மணல் திருட்டை தக்க ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர் தயக்கம் காட்டி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற பனசலாறு நீரோடை மூலம் இங்குள்ள மந்தைக்குளம், மீறு சமுத்திரம் கண்மாய் ஆகியவற்றிறக்கு நீர்வரத்து உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த நீரோடை திகழ்கிறது.
இதுபோன்ற நீரோடைகளில் இருக்கின்ற மணலை திருட்டுத்தனமாக எடுக்காவிடாமல், விவசாயிகள் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இருந்தபோதிலும் தற்போது மணல் திருட்டு நடந்துள்ளது. இவற்றை நாங்கள் உரிய ஆதாரத்துடன் கண்டறிந்து அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளோம். எல்லாம் சரியாக இருந்தும் அலுவலர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது வேதனையை அளிக்கிறது.
மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.