தேனி: உத்தமபாளையம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் விவசாயத் தொழிலை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். தற்போது அவரை சாகுபடி செய்ய ஏற்ற பருவம் என்பதால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பல ஏக்கரில் அவரைக்காய் விதையை பயிரிட்டு விவசாயம் மேற்கொண்டனர். இந்நிலையில் ஏக்கருக்கு 30,000 மேல் செலவு செய்து அவரை பயிரிட்ட நிலையில் செடிகள் எதுவும் பூக்காமல் அழிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், அரசு அங்கீகரிக்கப்பட்ட குரு அக்ரோ டெக் நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட அவரை விதைகள் தரமற்றது என்பதால் செடிகள் வளரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும், வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்ட போதும் முறையான பதில் கிடைக்காததால் அவரை செடிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
கடன் வாங்கி ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் செடிகள் விளைச்சல் கிடைக்காததால் கவலை தெரிவித்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மேலும், போலி விதைகள் வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்கா போறீங்களா!... அப்போ இத படிங்க முதல்ல..!
இது குறித்து தேனி விவசாயி மகேஸ்வரன் கூறுகையில், "எங்க ஊர் விவசாய நிலத்தில் சுமார் 100 ஏக்கருக்கு அவரைக்காய் விதையை பயிரிட்டுள்ளோம். குறிப்பாக 'குரு அக்ரோ டெக் நிறுவனத்தில்' இருந்து வாங்கப்பட்ட பாதிக்கு மேற்பட்ட விதைகள் எல்லாம் போலிகளாக உள்ளது.
இது குறித்து நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது எங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை என கூறுகின்றனர். கடந்த 5 வருடங்களாக இந்த நிறுவனத்தில் தான் விதைகள் வாங்குகிறோம். இந்தாண்டு தான் விதைகள் இப்படி வந்துள்ளது. இந்த செடியை 6 மாதங்களாக பயிரிட்டு விவசாயம் செய்வோம். இந்த காலத்தில் மட்டும் தான் அவரைக்காய் செடி எந்த நோய் தாக்கமின்றி வளரும் தன்மை கொண்டது.
நாங்கள் எல்லோரும் சிறு விவசாயிகள், கடன் பெற்று தான் விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், தற்போது அவரை செடி பாதிப்பால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் லாபம் கிடைத்தால் மட்டுமே எங்களால் அடுத்து விவசாயம் செய்ய முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து உரிய நிவரணம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாங்கிய கடனுக்காக வீட்டை அபகரித்து துரத்தியதாக புகார் - ஆட்சியர் அலுவலகத்தின் முன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!