பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த வடகரை பகுதியைச்சேர்ந்தவர், அக்கீம். சம்பவத்தன்று சாலையில் அமர்ந்து மது அருந்திய அக்கீம், குறுக்குச் சாலையில் மது பாட்டில்களை வரிசையாக அடுக்கி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
செல்போனில் சினிமா பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஏற்றார்போல் அசைவுகளை செய்துகாட்டி சாலையில் சென்ற பெண்கள் உள்ளிட்டோரை வீண் வம்பு இழுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அருகில் இருந்த டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த அதேபகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் தலையில், டீ ஆற்றும் ஈயக் கப்பால் அடித்து மண்டையை உடைத்து, அக்கீம் ரகளையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து முத்துகுமாரும், அக்கீமும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்தக் காயங்களுடன் இருந்த முத்துகுமாரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அக்கீமை கைது செய்த போலீசார், ஏற்கெனவே பொதுஇடங்களில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக அக்கீம் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முகக் கவசம் கட்டாயம் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்