தேனி: தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வனின் மகள் திருமண விழா இன்று (20.08.2023) நடைபெற்ற நிலையில் திமுக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மேலும் முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர்கள் மூலம் வாழ்த்து மடலையும் அனுப்பி வைத்து uள்ளார்.
திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் தங்க தமிழ்செல்வன். இவரது மகள் சாந்தினி. இவரது திருமணம் இன்று தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த திருமண நிகழ்ச்சிக்காக, கம்பம் பகுதியில் உள்ள சாலையில் ராட்சத நுழைவாயில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வழி நெடுக திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. பின்னர் திருமண மண்டபத்திற்கு முன்பாக பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் பெரிய கட் அவுட்களாக வைக்கப்பட்டு இருந்தது. கம்பம் பகுதியில் மாநாடு போல் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
கம்பம் பகுதியில் உள்ள பி.எல்.ஏ.திடலில் நடைபெற்ற இந்த திருமணத்தை திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு நடத்தி வைத்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், மணமக்களுக்கு வாழ்த்து கூறி வாழ்த்து மடலையும் அமைச்சர்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அந்த மடலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாசித்து மணமக்கள் சுப்ரமணியன் - சாந்தினி ஆகியோரை ஆசீர்வாதம் செய்தார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு வேண்டும் என்று சொல்ல எடப்பாடிக்கு திராணி உள்ளதா... அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
இதனை தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் மற்றும் எம்.எல்.ஏக்கள், உட்ப்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.