2024ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் மத்திய அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஜல் ஜீவன் மிஷன். இத்திட்டம் தேனி மாவட்டத்தின் 112 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளன. இதனிடையே சில குறிப்பிட்ட ஊராட்சிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தற்போது ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்பிற்கான கட்டணம் வசூல் செய்வதில் உள்ள நடைமுறையை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று (அக்.14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்ட செயல்பாட்டிற்காக தேனி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் முறையற்ற பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீட்டு குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சியின் கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தொகைக்கு குறையாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இவ்வாறு முறைப்படுத்தப்பட்ட வீடு குடிநீர் இணைப்புகளுக்கு குழாய் வரி ஊராட்சியில் இருக்கும் நடைமுறையை பொறுத்து முறையாக மாதம் ஒன்றுக்கு 60 ரூபாய் வீதம் என்று வருடத்திற்கு 720 ரூபாய்க்கு குறையாமல் வசூலிக்கப்பட வேண்டும் என அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்டவாறு டெபாசிட் மற்றும் குழாய் வரி வசூல் செய்யப்படுவதில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டாலும், முறையாக ரசீதுகள் வழங்கப்படவில்லை என்றாலும், 1800-425-6140 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேனியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவதாக புகார்!