தேனி: முதலமைச்சர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என அறிவிக்கப்படாததால் தேனி மாவட்ட அதிமுகவினர் ஏமாற்றமடைந்தனர்.
2021ஆம் ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பிற்கு பிறகு இந்த அறிவிப்பை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக் .7) அறிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், காமராஜ் ஆகிய ஆறு பேரும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களான ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகிய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்த அறிவிப்பினால் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசலும் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதிமுகவினர் தமிழ்நாடு எங்கும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எவ்வித கொண்டாட்டமுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம், அவரது சட்டப்பேரவைத் தொகுதியான போடிநாயக்கனூர், மாவட்டத்தின் தலைநகர் தேனி, அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்படும் ஆண்டிபட்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அதிமுகவினர் எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை நிலவி வந்த சமயத்தில், ஓ.பி.எஸ்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். அதன் வெளிப்பாடாக கடந்த சில தினங்களுக்கு முன் அரசு விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அவரை நாளைய முதல்வர் என 100 அடி நீளத்தில் பேனர் வைத்து வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு மக்கள், அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுவரை தான் முடிவுகள் எடுத்ததாகவும், இனியும் அவ்வாறே இருக்கும் எனவும் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்… வடிவேல் போல் பறந்த நடத்துநர்!