தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. இவருக்கு சொந்தமான பள்ளி பெரியகுளத்துக்கும் லட்சுமிபுரம் கிராமத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் கட்டுமானப்பணிக்காக வடவீரநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து அரசு புறம்போக்கு நிலங்களில், அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக கிராவல் மண்ணை வெட்டி எடுத்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று உள்ளதாகவும், இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட கிராவல் மண்ணின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும்;
எனவே, இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்து சக்கரவர்த்தி என்பவர், தேனி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுவினை சமீபத்தில் அனுப்பி வைத்து இருந்தார். இதனையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இது தொடர்பான விசாரணையை நடத்துமாறு பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் மேற்கண்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தும், வட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடத்தி, அதன் அறிக்கையினை மாவட்ட கண்காணிப்புக்குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக கிராவல் மண்ணை அள்ளி அவரின் பள்ளி வளாகத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டும் அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் விசாரணை என்று மிகவும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடிதத்தில் அரசு வருவாய் இழப்பினை ஏற்படுத்தியும், பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வரும் புஷ்பம் புளூ மெட்டல் நிறுவனத்தின் மீதும் புகார்கள் வந்துள்ளதால், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரனைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகெர்லா செபாஸ் கல்யாண் பொறுப்பேற்றார்!