தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகே மாவட்ட எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆய்வுமேற்கொண்டார். அப்போது, வெளிமாநிலங்களிலிருந்து தேனி, பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து, கொடைக்கானல் செல்லும் வெளிமாநில நபர்கள் குறித்த விவரங்களை உடனடியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காகச் சென்று, சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு திரும்பி பரிசோதனைக்காக ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள இளைஞர்களிடம் நலம் விசாரித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இது குறித்து அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "பரிசோதனை முடிவுகள் வரும்வரை, உங்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். உரிய பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, நீங்கள் வீட்டுக்குச் சென்று 28 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அங்குள்ள அலுவலர்களிடம் தங்கியுள்ள நபர்களுக்கு தினசரி செய்தித்தாள்கள் வழங்கிடக் கூறினார். மேலும் தினசரிப் பதிவுகளை உடனுக்குடனே பதிவேடுகளில் பதிவிட உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளின்போது, பெரியகுளம் சார் ஆட்சியர் சினேகா, ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் மேலும் இருவருக்கு கரோனோ உறுதி - மாவட்ட எல்லையில் தீவிர சோதனை