தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவைப்படும் முக்கிய உணவுப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தியாகி வருகின்றன.
வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப்பொருள்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏற்படாமல் இருக்க, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தேனி (செல்:9442009901) மற்றும் தேனி விற்பனைக் குழுச் செயலர் (செல்:9443423734) ஆகியோரை தொடர்பு கொண்டு விளைப்பொருள்களை விற்பனை செய்து பயனடையலாம்.
2. காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது விளைப்பொருள்களைத் தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக, தேனி, சின்னமனூர், கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் இலவசமாக இருப்பு வைக்கும் காலம் மே 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
3. விவசாயிகள் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளிலும் தங்கள் விளைப்பொருள்களை இருப்பு வைத்து கிடங்கு வாடகை கட்டணமின்றி விற்பனை செய்யவும் மே 31.ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
4. நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, வெல்லம், வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைப்பொருள்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இச்சந்தைக் கட்டணம் மேலும் ஒரு மாத காலம் ரத்து செய்யப்படுகிறது.
5. கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளைப்பொருள்களுக்கு அடைமானத்தின் பேரில் அதிகபட்சம் 50 விழுக்காடு சந்தை மதிப்பு அல்லது மூன்று லட்சம் ரூபாய், இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனைப் பெற்றிடலாம். கடனிற்கான கால அளவு 180 நாள்கள் ஆகும். இதற்கான வட்டி ஐந்து சதவீதமாகும். கடனிற்கான வட்டி முதல் 30 நாள்களுக்குச் செலுத்திட தேவையில்லை என ஆணையிடப்பட்டிருந்தது. இச்சலுகையும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. தேனி, பெரியகுளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (செல்.9843625889), கம்பம், உத்தமபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (செல்.8438348176), சின்னமனூர், ஆண்டிபட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் (செல்.9994716960), போடிநாயக்கனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் (செல்.9842198075) ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 104 பேருக்கு கரோனா பாதிப்பு!