தேனி மாவட்டத்தில் கோடாங்கிபட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன், வீரலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் காளீஸ்வர பாண்டியன் என்ற மகன் உள்ளார். பூக்கடை நடத்தி வரும் வேல்முருகன் இன்று தனது ஊரில் இருந்து சின்னமனூரில் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக, மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி விலக்கு பகுதியில் வேல்முருகனின் இருசக்கர வாகனமும் எதிர்திசையில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி வீரலட்சுமி கை முறிவு ஏற்பட்டு, உடலில் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை காளீஸ்வரனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேல்முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்ததும்; எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியின் டயர் அவரை சில அடி தூரம் இழுத்துச் சென்றது. இந்த கொடூர விபத்தில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வீரபாண்டி காவல் துறையினர் இராயப்பன்பட்டியைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் ஜான் போஸ்கோ என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
சினிமா பாணியில் பைக் திருட்டு - வேதனையில் முடிந்த சோதனை ஓட்டம்!