மதுரை மாவட்ட ஆவினிலிருந்து தேனி மாவட்ட ஆவின் பிரிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தவாறே இருந்தது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, தேனி ஆவினின் தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து அம்மாவாசி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஓ.ராஜா, அவருடன் பதவியேற்ற 17 இயக்குனர்களின் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, கடந்த ஜனவரி 30ஆம் தேதி, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா, துணைத்தலைவராக செல்லமுத்து ஆகியோருடன் 17 இயக்குனர்கள் என தேனி ஆவினின் இடைக்கால நிர்வாகக் குழுவினர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் அமைச்சர் ராஜேந்திரபலாஜி பேசுகையில், ”விரைவில், தேர்தல் நடத்தப்பட்டு தேனி ஆவினின் நிர்வாகக் குழு அமைக்கப்படும் என்றார். அதன்படி, அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம், தேனி, போடி, கம்பம், ஆண்டிபட்டி, கடமலை, மயிலை, சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஒன்பது தொகுதிகளாக, தேனி ஆவின் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களில் 5 பெண்கள், 3 பட்டியலினத்தவர்கள் உள்பட 17 இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 28ஆம் தேதி மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 29ஆம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருக்கும் பட்சத்தில் மார்ச் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
தற்போதுள்ள கள நிலவரப்படி, ஓ.ராஜா தரப்பும், அம்மாவாசி தரப்பும் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மார்ச் 4ஆம் தேதி தேர்தலில் தேனி ஆவினை ஓ.ராஜா கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்ற கேள்வி எழுந்துள்ளது.