கரோனா வைரஸ் பரவல் தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொடக்கத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்த நிலையில், ஒற்றைச் சதம், இரட்டைச் சதமாக மாறி தற்போது மூன்று சதமாக உயர்ந்துள்ளது.மேலும், பலி எண்ணிக்கையும் நாள்தோறும் கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், போடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர், தேவதானப்பட்டி காவல் நிலையக் காவலர், கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் என நேற்று (ஆகஸ்ட் 03) ஒரே நாளில் 305 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 5 ஆயிரத்து 969ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சையில் இருந்த வடுகபட்டியைச் சேர்ந்த 61 வயது முதியவர், மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த 54 வயது பெண், பெரியகுளத்தைச் சேர்ந்த 50 வயது நபர் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெரியகுளம் (68பேர்), போடி (66பேர்), தேனி (57பேர்) சின்னமனூர் (49 பேர்) ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகம். தேனி மாவட்டத்தில் தற்போது வரை 3,323 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,578 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.