தேனி: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், ஆதீஸ்வரன். இவர் பெரியகுளம் தென்கரை சந்தையிலுள்ள கோழிக்கறி விற்பனை கடையில் நேற்று மாலை (ஜன.10) கோழி இறைச்சி வாங்கி வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். இன்று (ஜன.11) காலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த கோழி இறைச்சியை எடுத்து, மனைவி சமைத்து பள்ளிக்கு செல்லுகின்ற குழந்தைகளுக்கு மதிய உணவிற்காகவும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், வெளியே சென்று வீடு திரும்பிய ஆதீஸ்வரன் என்பவருக்கு அவரது மனைவி உணவு பரிமாறியபோது சமைத்த கோழி இறைச்சி குழம்பில் புழுக்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பதறிப் போன ஆதீஸ்வரன், தான் குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் என்ற அச்சத்தில் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்கு கொடுத்த மதிய உணவை திரும்பப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கோழிக்கறி விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் சென்று, உங்களிடம் வாங்கிச் சென்ற கோழிக்கறியில் புழுக்கள் இருப்பதாகவும், கெட்டுப்போன கோழிக்கறிகளை பெற்றுள்ளதாகவும் கூறி உறவினர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிக்கறி இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் கெட்டுப்போன கோழிக்கறிகளை விற்பனை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், உணவு பாதுகாப்புத்துறையினர் கோழிக்கறி கடைகளை ஆய்வு செய்து, கெட்டுப்போன கோழிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார், ஆதீஸ்வரன்.
இதையும் படிங்க: துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் உயிரிழப்பு!