தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கும் வகையில் ஏழு பனி மனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஏழு பனிமனையில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் தேனியில் உள்ள பனிமனையில் இருந்து வீரபாண்டியில் இயங்கும் சட்டக் கல்லூரிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.
அவற்றில் கடந்த 11- 7-22 ஆம் தேதி TN - 57 N - 1899 என் கொண்ட அரசு பேருந்தை அரசு ஓட்டுநர் பாண்டி விஸ்வநாத் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது வீரபாண்டியில் ஆட்டோ ஓட்டி வரும் சரவணன் என்பவர் அரசு ஓட்டுநர் பாண்டி விசுவநாதனிடம் தான் அரசு பேருந்தை ஓட்டுகிறேன் என்று கூறி அரசு பேருந்தை வாங்கி ஏழு கிலோமீட்டர் தூரம் பயணிகளை வைத்து ஒட்டியதாக கூறப்படுகிறது.
அதன்படி சரவணன் என்பவர் கைலி வேட்டி அணிந்து அரசு பஸ்ஸை ஏழு கிலோமீட்டர் ஓட்டிச் சென்ற வீடியோவை அரசு ஓட்டுநர் பாண்டி விசுவநாதன் வீடியோ எடுத்து டிக் டாக் செய்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி கிளை மேலாளர் லாசரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கிளை மேலாளர் லாசரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது முறையாக பதிலளிக்காமல் கைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.
பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாகவும் இது போன்ற பொறுப்பற்ற முறையில் செயல்படும் அரசு ஓட்டுநர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்