தேனி மாவட்டம், போடி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, பரமசிவன் மலைக் கோவில். இப்பகுதிக்கு சுற்றுலாவுக்காக வந்திருந்த கல்லூரி மாணவர்கள், இக்கோயிலின் அருகில் உடல் இல்லாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போடி நகர காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் துறையினர், துண்டிக்கப்பட்ட தலையைக் கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உடல் ஏதேனும் கிடைக்கின்றதா என்ற தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.
ஆனால், உடல் கிடைக்காத நிலையில் கொலை செய்யப்பட்டவர் யார்? அவர் எப்பகுதியைச் சேர்ந்தவர்? அவரைக் கொலை செய்த நபர்கள் யார்? என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், 'கைப்பற்றப்பட்ட தலை சுமார் 50 வயது மிக்க ஒரு ஆணின் தலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அழுகிய நிலையில் தலை இருப்பதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு தலையை இப்பகுதியில் விட்டுச் சென்றிருக்கலாம்' எனத் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்பம் பகுதியில் கை, கால், தலை இல்லாமல் உடல் மட்டும் கிடந்த சம்பவம் நினைவை விட்டு மறையாத நிலையில் போடி பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில், கிடந்த முதியவரின் தலையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:'சைக்கோ' பட பாணியில் நடந்த கொலைச் சம்பவம் - தலையைத் தேடிவரும் காவல்துறை!