தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் 1ஆவது வார்டு பொட்டிப்புரம் பகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி சிவக்குமார். இவர் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். இதன் பின்னர், ஜெயந்தி சிவக்குமார் திமுகவினருடன் செல்லாமல் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வந்ததையடுத்து ஜெயந்தியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி காவல் துறையின் பாதுகாப்போடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தியை காணவில்லை என்றும் அவரை அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாகவும், விரைவில் அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கோரி நேற்று திமுகவினர் டி.திம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தும் ஒன்றிய கவுன்சிலர் காணாமல் போனதாகக் கூறி போடி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளித்தனர்.
சின்னமனூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக ஆறு வார்டுகளையும், அதிமுக நான்கு வார்டுகளையும் கைபற்றியிருந்தது. தற்போது திமுக கவுன்சிலர் ஜெயந்தி சிவக்குமார் அதிமுக பக்கம் சென்றதால் இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.
இதனால் சின்னமனூர் ஒன்றியத்தை எந்தக் கட்சி கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின் போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் உள்ளூர் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் -அமைச்சர் ஜெயக்குமார்