தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, பாலார்பட்டி, குச்சனூர், உப்புக்கோட்டை, அல்லிநகரம் மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விளைவிக்கப்படும் வாழைக்காய்கள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வாழைக்காயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வாழைக்காய்களை வெட்டாமல், மரத்திலேயே விட்டுள்ளனர். இதனால் காய்கள் அனைத்தும் பழமாகி அழுகிய நிலையில் மரத்திலேயே தொங்குகின்றன. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், பல லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரம் தார் ஒன்று ரூ. 200 வரை விற்பனையானது, ஆனால் தற்போது ரூ. 100க்கும் குறைவாக விலை போகிறது. இதனால் போட்ட முதலுக்கு கூட எடுக்க முடியவில்லை என்பதால், காய்களை வெட்டாமல் மரத்திலேயே விட்டுள்ளதாகவும், இதற்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.