டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன், கடந்த மாதம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து தன்னுடைய ஆதரவாளர்களையும் திரட்டி திமுகவில் இணைப்பதற்காக, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமின் தொகுதியான போடியில் மிகப்பெரிய இணைப்பு விழா விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜூலை 21ஆம் தேதி தேனி அருகே உள்ள வீரபாண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு கால்கோள் நடப்பட்டது.
பின்னர் தேனியில் உள்ள நட்சத்திர விடுதியில் மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய தங்க தமிழ்செல்வன், "திமுகவில் இருக்கின்றவர்கள் யாரும் ஜால்ரா அடிப்பது இல்லை. ஆனால் இதற்கு முன் தான் இருந்த இயக்கங்களில் இது போல் எவரும் அப்படி இருந்தது கிடையாது. அனைவரும் ஜால்ரா அடித்து அரசியல் செய்து வருகின்றனர்.
புழு போல் இருந்த ஓபிஎஸ், பாவனை செய்தே விஸ்வரூபம் எடுத்தவர். கம்பம் செல்வேந்திரன், தினகரன், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் முன்னிலையில் பாவனை செய்து பதவி உயர்வு அடைந்துள்ளார்.
நேரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே நடத்தப்பட்ட தேர்தல் செலவுகளை விட, தற்போது துணை முதலமைச்சர் தேனி தொகுதியில் செலவு செய்துள்ளார். இன்றைய சூழலில் அதிமுகவில் 15 கோஷ்டிகள் நிலவுகின்றன. இவர்களது உட்கட்சிப் பூசலை சரி செய்வதற்காக சென்னையில் இருந்து அடிக்கடி டெல்லி சென்று, பியூஷ் கோயல், அமித் ஷா, பிரதமர் மோடி போன்ற பாஜக தலைவர்களை சந்திக்கின்றனர்.
தேனியில் பணபலம், ஆட்சி பலம் என செல்வாக்கு மிக்கவராக ஓபிஎஸ் திகழ்கிறார். அவரை எதிர்த்து அரசியல் செய்வதற்கு திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் நம் கைகோர்தால், தேனி மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றி விடலாம்" என்றார். மேலும் பேசிய அவர், "இணைப்பு விழாவிற்கான இடத்திற்கு ஓபிஎஸின் மகன், சகோதரர் என பல்வேறு வழிகளில் நெருக்கடி தந்தனர். ஆனால் அதையும் தாண்டி இந்த விழா சிறப்பாக நடைபெறும்" என்றார்.