தேனி - மதுரை சாலையில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனம் (ஸ்ரீகணபதி சில்க்ஸ்) இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கோயமுத்தூர், சங்கரன்கோவில் மற்றும் வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் ஜவுளிக்கடை உரிமையாளர் முருகன் (32) மீது அதே கட்டடத்தில் செயல்பட்டு வரும் டிசைனர் ஸ்டூடியோ மற்றும் அழகு சாதனப் பொருள்கள் விற்பனையகத்தின் உரிமையாளரான 29 வயது பெண் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், “கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூதல் ஜவுளிக்கடையின் உரிமையாளர் முருகன் தன்னிடம் நட்பு ரீதியாக பழகி வந்தார். அதன் பின், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி, நான் மறுத்த போதிலும் என்னை நம்பவைத்து ஏமாற்றி வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்தார். இதையடுத்து சின்னமனூரைச் சேர்ந்த வேறோரு பெண்ணை என்னுடைய பெற்றோர் திருமணம் செய்து கொள்ளச் சொல்வதாக முருகன் கூறினார்.
கடந்த மாதம் மார்ச் 8ஆம் தேதி தேனி பழனிசெட்டிபட்டியிலுள்ள அவரது மேலாளர் வினோத் வீட்டில் வைத்து சத்யா என்பவர் முன்னிலையில் தாலியை கட்டி என்னை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் முருகன், சின்னமனூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜவுளிகடை உரிமையாளர் முருகன் 40 நாள்களுக்கு பிறகு நேற்று (ஏப்.21) தேனி காவல் துறையினரிடம் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி மகிளா நீதிமன்றத்தில் முருகனை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட சிறையில் முருகனை அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.2,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்