தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. இவற்றில் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்ட மக்னா என்ற ஒற்றை காட்டு யானை விளைநிலங்களை சேதப்படுத்தியும், மனிதர்களை தாக்கியும் வருகிறது.
ஜூன் மாதம் முதல் இந்த ஒற்றை காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி, இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
காட்டு யானை - மனித மோதலைத் தவிர்ப்பதற்காக, இரவு நேரங்களில் விளைநிலங்களில் விவசாயிகள், காவலாளிகள் தங்குவதற்கு, கால்நடைகள் கிடை அமைப்பதற்கு மாவட்ட வனத்துறை தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்றிரவு (ஜூன் 17) தேவாரம் சாக்கலூத்து மெட்டு வழியாக கேரளாவிற்கு வனப்பாதையில் நடந்து சென்ற, இரண்டு தோட்டத் தொழிலாளர்கள் காட்டு யானையிடம் சிக்கிக் கொண்டனர். இருவரையும் மீட்ட கேரள வனத்துறை உத்தமபாளையம் வனத்துறையினரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் கௌதம் இன்று(ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், "காட்டு யானை - மனித மோதலைத் தவிர்க்க மாவட்ட வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், வனப்பாதை வழியாக நடந்து சென்ற இருவர் காட்டு யானையிடம் சிக்கியுள்ளனர்.
இது போன்ற சம்பவம் இனி தொடராமல், இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து அனுமதிக்கப்பட்ட வனப்பாதைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்படுகிறது.
அதன்படி கோம்பை, தேவாரம் அருகே உள்ள சாக்கலூத்து மெட்டு, பதினெட்டாம் படி, குதிரை பாஞ்சான் மற்றும் ராமக்கல் மெட்டு ஆகிய வனப்பாதைகளை மறு உத்தரவு வரும் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், கால்நடை மேய்ப்பவர்கள் என யாரும் இந்த வனப்பகுதிகளை பயன்படுத்த வேண்டாம். மீறி செல்வோர் மீது வனச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.