தேனி: கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திண்டுக்கல் நோக்கிச் சென்ற கார் தேவதானப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதனை அடுத்து, அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக இந்த விபத்து குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, தேவதானப்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், இந்த கோர விபத்தில், காரில் பயணித்த 5 ஐயப்ப பக்தர்களில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதும், காரில் பயணித்த மேலும் இருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. இதனை அடுத்து, பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடிய இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் தேவதானப்பட்டி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான கார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்தில் பலியான நபர்கள் தெலுங்கானா மாநிலத்தில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்தும் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், காரில் பயணித்தவர்கள் தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதில் சம்பவ இடத்திலேயே பலியானவர்கள் சுப்பையா நாயுடு (55), நரசாம்பையா (50), ராஜு (55) ஆகிய மூன்று பேர் என்பதும் மேலும் ராமு (30), அஜய் (25) ஆகியோர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதில் விபத்தில் சிக்கிய அஜய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சபரிமலை சென்று திரும்பிய கார் சாலை ஓர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானதில் காரில் பயணித்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 5 நபர்களில் 3 ஐயப்ப பக்தர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசிடம் 18 கோடி நிதி வழங்க வேண்டுகோள் - நீலகிரியில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!