தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் விற்பனையாளராக பணிபுரிபவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கம் போல அவர் கடையைத் திறக்க வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் மொபைல் மூலம் இன்று (ஆக18) தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடையை திறக்க முயன்றவர் அருகில் அமர்ந்து கொண்டு மற்ற பணியாளர்களை திறக்கச் செய்தார். இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கம்பம் நகராட்சி சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
மேலும், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடினர். கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருடன் பணிபுரிந்த மற்ற பணியாளர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க வந்த மதுப்பிரியர்கள் கடை அடைக்கப்பட்டதால் அருகில் இருந்த கடைக்கு படையெடுத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு