தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பென்னிகுயிக்கின் 180ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் பொங்கல் வைத்து வழிபட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த செலவில் கட்டி தென்தமிழ்நாடு மக்களின் தாகம் தீர்த்த தந்தையாக போற்றப்படுபவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக். இவரது பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதியன்று தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் சமத்துவ பொங்கலாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தங்களது குடும்பத்துடன் இன்று பென்னிகுயிக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து நன்றிக்கடன் செலுத்தினர்.
பென்னி குயிக் மணிமண்டபத்தில் பொங்கல் வைத்து வழிபாடு தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்-ல் உள்ள பென்னிகுயிக்கின் மணிமண்டபத்தில் தங்களது குடும்பத்தினருடன் வந்து பொங்கல் வழிபட்ட ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பென்னிகுயிக்கின் புகழ்பாடி, அவரது திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தலைவர் எஸ் ஆர் தேவர், “தென்தமிழகத்தின் ஜீவநாடியாக திகழக்கூடிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அணையின் நீர்மட்டத்தை 142 அடி தேக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் கேரள அரசின் செயல் கண்டிக்கதக்கது. இது தொடர்பாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பலகட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு மரியாதை அளிக்கும் வகையில் தேனி பேருந்து நிலையத்திற்கு அவரது பெயர் வைத்த அதிமுக அரசுக்கு பாராட்டுகள். இருப்பினும், பேருந்து நிலையத்தில் பென்னிகுயிக்கின் புகைப்படமும் மார்பளவு சிலை வைக்க வேண்டும்” என்றார்.