தேனி: தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக போடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பழனிசெட்டிபட்டி, துரைராஜபுரம், அம்மாபட்டி, பொட்டிப்புரம், உப்புக்கோட்டை, கூழையனூர், அம்பாசமுத்திரம் ஆகிய ஏழு இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோடங்கிபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருந்தகம், அங்கன்வாடி மையம், சுகாதாரச் செயல் விளக்க பூங்கா, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளையும் இன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அத்தொகுதி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இருதலை மணியன் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு