தேனி: கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது, சுருளி அருவி. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் விழா நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சுருளி அருவியில் சாரல் விழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு சுருளி அருவியில் சாரல் விழா துவங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நேற்று (செப்.27) முதல் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வரை என 6 நாட்கள் நடைபெறும் இந்த சாரல் விழா நிகழ்ச்சியின் தொடக்க நாளான நேற்று, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா விழாவை துவக்கி வைத்தார்.
மேலும் விழாவில் சுற்றுலா, வனம், சுகாதாரம், வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கண்காட்சிகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இது தவிர மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயார் செய்யும் பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைகளும், வேளாண், தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
சுமார் 6 நாட்கள் நடைபெறும் சுருளி சாரல் விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள், சமூக நலத்துறை சார்பில் சிலம்பம் கலை நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இந்த சாரல் விழாவை முன்னிட்டு தேனி, உத்தமபாளையம் மற்றும் கம்பம் பகுதியில் இருந்து சுருளி அருவிக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், அருவியில் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனபடி, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு தூய்மைப் பணிகளும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியும், நெகிழி பொருட்களைத் தவிர்த்து மாற்றுப் பொருட்களை உபயோகப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நிகழ்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியா வர பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பிரச்சினையா? அதான் இவ்வளவு லேட்டா!