2014ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக துணைக் கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைத்தனர். இந்த குழுவின் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார்.
தமிழ்நாடு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோரும் குழுவில் உள்ளனர். கடந்த ஜுன் 24ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 112.40 அடியாக இருந்தபோது துணைக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், தற்போது கேரளாவில் பருவமழை தொடங்கி வலுவடைந்துள்ள நிலையில், நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ளது. நேற்று (ஆக.11) காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 136.75 அடியாக இருந்ததால், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அணையில் செய்துள்ள, முன்னேற்பாடுகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
முன்னதாக, குழு தலைவர் சரவணக்குமார் கொச்சியிலிருந்து வர தாமதமானதால், தமிழ்நாடு அலுவலர்கள் தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணித்துறையின் கண்ணகி படகில் அணைக்குச் சென்றனர். அதேபோல், கேரளப் பிரதிநிதிகள் கேரள வனத்துறை படகில் அணைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு பெரியாறு பிரதான அணை, சிற்றணை (பேபி அணை), கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் மாலையில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பெரியாறு அணையிலுள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை சிறப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், "அணையின் மதகுகளில் ரேடியல் 1 மற்றும் வெர்டிகல் 4,8 (அணையில் உள்ள 13 மதகுகளில் 1,7,11) மதகுகளை இயக்கி பார்த்ததில் அதன் இயக்கமும் சீராக இருந்தது. அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ள நிலையில் சீப்பேஜ் வாட்டர் துல்லியமாக உள்ளதால் அணை பலமாக உள்ளது" எனத் தெரிவித்தனர்.
துணைக் குழுவின் ஆய்வு அறிக்கை மூவர் கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. கனமழையை காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில், துணைக் கண்காணிப்பு குழுவின் ஆய்வறிக்கை தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.