கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மூணார். இப்பகுதி மக்களின் அத்தியாவாசியப் பொருட்களான அரிசி, பருப்பு, மசாலா மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகள் தேனி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் செயல்பட்டன.
இதனால் மூணாரை சுற்றியுள்ள சூரியநெல்லி, குண்டலாறு, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வந்தனர். இருப்பினும் காய்கறி, மருந்து வாங்கச் செல்வதாகக் கூறி பலரும் இருசக்கர வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றி திரிந்துள்ளனர்.
எனவே இதனைக் கட்டுப்படுத்த தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம்கிருஷ்ணன் மூணாரில் உள்ள அனைத்து கடைகளையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் வரையில் மட்டுமே கடைகள் செயல்படும் என்பதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதியது. அதனை கட்டுப்படுத்த மூணார் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோவிட்19: உங்கள் செல்லப்பிராணி எவ்வளவு பாதுகாப்பானது?