ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் எளிதில் பெற ஆரம்பிக்கப்பட்டது தான் "பரிவாகன்" என்ற மென்பொருள். மேலும் இதன் மூலம் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், நகல் பெறுதல், தற்காலிக, நிரந்தர வாகனப்பதிவு, வாகன தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் பெற முடியும்.
இடைத்தரகர்கள் இன்றி வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இதில் பழகுநர் உரிமம் விண்ணப்பம் செய்த 30 நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வுக்கான தேதியையும் பார்த்துக் கொள்ளலாம்.
அன்றைய தினம் மட்டும் விண்ணப்பதாரர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று, மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை இயக்கி காண்பிக்க வேண்டும். இதனால் பொதுமக்களின் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது.
"இதில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல் என்பது ஏழை, எளிய மக்களுக்கு சவாலானதாக உள்ளது. அப்படியே தெரிந்தாலும் அவர்களிடம் கணினியும் இல்லை, ஆண்ட்ராய்டு மொபைலும் இல்லை. இதனால் பொதுமக்கள் தனியார் நெட் சென்டர்களின் உதவியை நாடிச் செல்கின்றனர்" என்கிறார் பிரவுசிங் சென்டர் உரிமையாளர் மகாதேவன்.
பரிவாகன் இணையத்தில் விண்ணப்பம் செய்த பின்னர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்வதற்கான தேதி ஒதுக்கப்படுவதில் குளறுபடி நிலவுகிறது என வருத்தம் தெரிவித்தார், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன். மேலும் அவர் கூறியதாவது, "ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அல்லது இதர பிற சேவைகளுக்கு ஒருவர் தானாக விண்ணப்பம் செய்தால், அவருக்கு உரிய நேரத்தில் ஒதுக்கீடு கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது.
ஒரு மாதத்திற்குள் கிடைக்க வேண்டிய தேதி சில சமயங்களில் இரண்டு மாதங்கள் ஆனாலும் கிடைப்பதில்லை. ஆனால், குறிப்பிட்ட சில நபர்களுக்கும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கும் மட்டும் விண்ணப்பம் செய்த உடன் தேதி ஒதுக்கீடு கிடைக்கிறது" என்று கூறினார்.
இதுதொடர்பாக தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்டபோது, "மோட்டார் வாகனப் போக்குவரத்து சேவைகள் தொடர்பான பொதுமக்களின் இணையதள விண்ணப்பங்கள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளால் கண்காணிக்கப்படுகிறது. இவற்றில் எந்த விதமான குளறுபடிகளும் செய்வதற்கு வாய்ப்பு இல்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: உதவி செய்யுமா அரசு?