தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை 126 அடி கொள்ளளவு கொண்டது.
இந்த அணையின் மூலம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதி நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு கோடை தொடங்கியதில் இருந்தே அணையின் நீர்வரத்து குறைந்ததால், நீர்மட்டம் வெகுவாக சரியத் தொடங்கியது.
இந்நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அகமலை, ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் நீர் வரத்தின்றி காணப்பட்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று (செப்.06) 91.51அடியாக இருந்தது.இந்நிலையில் ஒரே நாளில் 22அடி உயர்ந்து தற்போது 113.16 அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 78.99 மி. கன அடியாகவும், நீர் வரத்து 328 கன அடியாகவும் உள்ள நிலையில், பெரியகுளம் நகர் குடிநீர் தேவைக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்து சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், பெரியகுளம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.