தேனி மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் நாகராஜ் (53). இவருக்கு மகேஸ்வரி (39) என்பவருடன் திருமணமாகி ஜெயசூர்யா (20) என்ற மகன் உள்ளார். தந்தை, மகன் இருவரும் பெயிண்டிங் வேலை செய்துவருகின்றனர்.
இதனிடையே நாகராஜின் உறவினரான தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த பரமசிவம் (58) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டரை வருடத்திற்கு முன், கணவர் நாகராஜை, மகேஸ்வரி விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து மகேஸ்வரி - பரமசிவம் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தேனியில் மிராண்டா லயன் தெருவில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நாகராஜூடன் சேர்ந்து வாழுமாறு உறவினர்கள் மகேஸ்வரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் நாகராஜ் மற்றும் அவரது மகன் ஜெயசூர்யா ஆகிய இருவரும் பரமசிவத்திடம் வாய்தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியதில், நாகராஜ் மற்றும் அவரது மகன் ஜெயசூர்யா ஆகிய இருவரும் பரமசிவத்தை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார். இடையில் தடுக்கவந்த மகேஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் காயமடைந்த மகேஸ்வரியை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பரமசிவத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்த தேனி நகர் காவல் துறையினர் நாகராஜ், ஜெயசூர்யாவை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.