தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ராயப்பன்பட்டி அருகே உள்ளது சண்முகாநதி அணை. மேகமலை மற்றும் ஹைவேவிஸ் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் 52.50 அடி கொள்ளளவு கொண்ட சண்முகா நதி நீர் தேக்கம், கடந்த மாதம் அதன் முழுக்கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து அணையிலிருந்து நீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையிலிருந்து நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், சண்முகா நதி அணையில் இருந்து நீரினை திறந்து வைத்தார்.
இதன் காரணமாக ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், எரசக்கநாயக்கனூர், ஆனைமலையன்பட்டி கண்ணிசேர்வைபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரத்து 640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. நீர் இருப்பை பொறுத்து விநாடிக்கு 14.47 கன அடி வீதம் 50 நாட்களுக்கு திறந்துவிடப்படவுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நீர் இருப்பு 79.57 மில்லியன் கன அடியாகவும், அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாசனத்திற்காக அமராவதி அணை திறப்பு!