தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவரின் 7 வயது மகள், மனநலம் பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இவர் தேனி அருகே அரண்மனை புதூர் சாலையில் உள்ள தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் தற்போது வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்தவர்களை கண்டறியாமல், நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தி குற்றவாளிகளை தப்ப விடுவதாக கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் களத்தில் குதித்தனர்.
முன்னதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வர முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டுத் தடையை மீறி போராட்டகார்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஓடினர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவலில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் உள்ள சாலையில் அமர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்த நாகை திருவள்ளுவன், வாய்பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தால் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.