தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மணலால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக சிலை வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகிற 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது விநாயகர் சதுர்த்திக்கு 15 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பல வருடங்களாக விநாயகர் சிலை விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடப்பு ஆண்டில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மும்மரம் காட்டி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, களிமண்ணால் ஆன விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியில் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதுடன், தெருக்களில் மேடை போட்டு, பந்தல் அமைத்து விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 3 நாள் விழாவாக கொண்டாடுவதை வழக்கமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாக்கள் பெரிய அளவில் நடைபெறாத சூழ்நிலையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாடுவதற்காக சிலைகள் வடிவமைக்கும் பணியில் தீவிரமாக பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், தற்போது எளிதில் தூக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அட்டையிலான விநாயகர் சிலையை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால், மணலால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்குவதற்கு பொதுமக்களிடம் ஆர்வம் இல்லை என சிலை சிற்பிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மூன்றடி உயரம் கொண்ட விநாயகர் சிலை 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் அதை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சிற்பிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், எளிதில் கரையக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத களிமண்ணால் செய்யக்கூடிய விநாயகர் சிலையை வாங்கி பயன்படுத்த பொதுமக்களுக்கு, அரசு பரிந்துரை செய்தால் சிலை சிற்பிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று சிலை சிற்பிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: "உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை" - சி.பி.ராதாகிருஷ்ணன்!