தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பட்டியலின மக்களுக்காக அரசு இந்திரா நகர் குடியிருப்பை உருவாக்கியது.
இந்த மக்கள் சில நாட்களாக நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்தப் பாதையை அரசிற்கு வழங்கவேண்டுமென 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று, கடந்த 14ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதையைச் சுற்றி சுவர் எழுப்பியதால் நடைபாதை தடைபட்டது.
இதையடுத்து, அந்தப் பாதையை அரசிற்கு வழங்கவேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடியிருப்பைக் காலி செய்து ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர்.
அரசு தரப்பிலிருந்து மூன்று நாட்களாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், நான்காம் நாளான இன்று கையில் தேசியக் கொடியை ஏந்தி அரை நிர்வாணத்துடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பேரணியைக் கைவிட்டு தற்காலிக குடியிருப்பிற்கு கலைந்து சென்றனர்.
தொடர்ந்து தேனி வட்டாட்சியர் தற்காலிக குடியிருப்பு அமைந்திருந்த பகுதிக்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், பல கட்டப் போராட்டம் நடத்தி தங்களது குடியுரிமைகளை ஒப்படைத்துவிட்டு மலைப்பகுதிக்கு குடிபெயர்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.